திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்-ஜனசேனா கட்சி நிர்வாகி கோரிக்கை

திருப்பதி :  திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் ஜன சேனா கட்சி நிர்வாகி கோரிக்கை விடுத்தார்.

திருப்பதியில் ஜனசேனா கட்சியின் மாவட்ட நிர்வாகி கிரண் ராயல் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருப்பதி பெருமாளை தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தருகிறார்கள். கொரோனா பாதிப்பு காலத்திற்குப் பிறகு தற்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து தருவதில்லை. குடிநீர் வசதி, அன்னதானம், தங்குமிடம் போன்றவற்றில் பற்றாக்குறையால் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

தற்போது திருமலையில் பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் அலிபிரி சோதனை சாவடியில் குடிநீர் பாட்டில்கள், குழந்தைகள் பால் பாட்டில்கள், ஷாம்பூ உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பக்தர்களிடம் இருந்து பாதுகாப்பு ஊழியர்கள் பறிமுதல் செய்கிறார்கள். திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்யாமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. மலைப்பாதையில் செல்லும்போது பக்தர்களுக்கு ஏதாவது இன்னல் ஏற்பட்டால் குடிநீருக்கு என்ன செய்வார்கள். இதுபற்றி தேவஸ்தன அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் திருமலையில் உள்ள கடைகளில் குடிநீர் கண்ணாடி பாட்டிலில் ஒரு லிட்டர் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். கண்ணாடி பாட்டில்கள் பயன்படுத்துவதால் ஒரு சிலர் ஆங்காங்கே வீசி செல்கிறார்கள். கண்ணாடித் துண்டுகள் காயத்தை ஏற்படும் அபாயம் உள்ளது. உடைந்த கண்ணாடி பாட்டில் துண்டுகளை வைத்துக் கொண்டு பக்தர்களை மிரட்டிய நிகழ்வும் கடந்த முறை நடைபெற்றது. மேலும் பக்தர்களின் அடிப்படை வசதிகளை  நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் தேவஸ்தான செயல் அதிகாரி வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: