புரோ லீக் ஹாக்கி இந்திய மகளிர் அணி தோல்வி: அர்ஜென்டீனா பதிலடி

ரோட்டர்டம்: புரோ லீக்  தொடரில் இந்திய மகளிர், அர்ஜென்டீனா  மகளிர் அணிகளுக்கு இடையிலான 2வது ஆட்டம்  நெதர்லாந்தின் ரோட்டர்டம் நகரில் நேற்று நடந்தது.   முதல் ஆட்டத்தில் வெற்றிப் பெற்ற உற்சாகத்துடன் இந்திய மகளிர் உற்சாகமாக ஆட்டத்தை தொடங்கினர்.  அதே நேரத்தில் முதல் ஆட்டத்தில் தோற்றதற்கு பதிலடி தரும் வகையில்  அர்ஜென்டீனாவும்  வேகம் காட்டியது.

ஆனாலும்   ஆட்டத்தின்  22வது நிமிடத்தில்  தேதே சாலிமா அழகாக பீல்டு கோல் அடித்து அசத்தினார். அதனால் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில்  முன்னிலைப் பெற்றது. அதற்கு பதிலடியாக அர்ஜென்டீனா  வீராங்கனை தோமே டெலிபினா 37வது  நிமிடத்தில்  கோலடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார்.   அடுத்து 40வது நிமிடத்தில் மற்றொரு அர்ஜென்டீனா வீராங்கனை  திரின்சினெட்டி   பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார்.

மறுபடியும் 42வது நிமிடத்தில்  கிடைத்த மற்றொரு பெனால்ட்டி கார்னரை    அகுஸ்டினா  கோலாக்கி அசத்தினார். எனவே அர்ஜென்டீனா 3-1 என்ற கோல் கணக்கில்  வலுவான நிலையை எட்டியது. அதன்பிறகு இந்தியா கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு 47 நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் மூலம் பலன் கிடைத்தது.   எக்கா தீப் அடித்த கோல் மூலம்  ஆட்டம் 2-3 என்று மாறி இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தது.

ஆனால் அதன் பிறகு 2 அணிகள் மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை. அதனால் அர்ஜென்டீனா 3-2 என்ற கோல்கணக்கில்  வெற்றிப் பெற்றது. இந்திய அணி நேற்று முன்தினம் பெனால்டி ஷூட் அவுட் முறையில் தன்னை வீழ்த்தியதற்கு நேற்றைய ஆட்டத்தின் மூலம் அர்ஜென்டீனா பதிலடி கொடுத்தது. கூடவே  அர்ஜென்டீனா 16 ஆட்டங்களில் விளையாடி 13 வெற்றிகள் மூலம்  42 புள்ளிகளுடன் முதல் இடத்தை தொடர்வதுடன் சாம்பியன் பட்டம் பெறுவதை உறுதி செய்துள்ளது.

Related Stories: