குருத்வாராவில் குண்டுவெடிப்பு ஆப்கானில் இருந்து இந்துக்கள், சீக்கியர்கள் நாடு திரும்ப விசா: பிரதமர் மோடி உத்தரவு

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் குருத்வாராவில் நடந்த குண்டுவெடிப்பு அசம்பாவிதத்தைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் 100 சீக்கியர்கள், இந்துக்கள் இந்தியா வருவதற்கு உள்துறை அமைச்சகம் உடனடியாக இ-விசா வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் பாக்-ஏ-பலா பகுதியில் உள்ள கார்தே பர்வான் குருத்வாராவில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் சீக்கியர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலின் போது வெடிபொருள் நிரப்பிய வாகனம் வெடித்து சிதறியது. தலிபான்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிகாலை நேரம் என்பதால், இந்த குண்டுவெடிப்பு நடந்த போது குருத்வாராவில் ஏறக்குறைய 30 பேர் மட்டுமே இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ஆப்கானில் வசிக்கும் சீக்கியர்கள், இந்துக்களை இந்தியாவுக்கு அழைத்து வரும்படி பிரதமர் மோடிக்கு பல்வேறு சீக்கிய, இந்து அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன. இதைத் தொடர்ந்து, அவர் பிறப்பித்த உத்தரவின்படி, ஆப்கானிஸ்தானில் வசிக்கும் 100 சீக்கியர்கள், இந்துக்கள் உடனடியாக இந்தியா திரும்பி வருவதற்கு வசதியாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் இ-விசா வழங்க உத்தரவிட்டுள்ளது.

* ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

ஆப்கானில் குருத்வாரா மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்த நாட்டில் செயல்படும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள இணையதள பதிவில்,  ‘இந்துக்கள், சீக்கியர்களை குறிவைத்து சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது,’ என்று கூறியுள்ளது.

Related Stories: