சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயிலுக்கு விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

பெரம்பலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பெரம்பலுார் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் மற்றும் பெரியசாமி மலை பகுதியில் உள்ள செல்லியம்மன் கோயில்களில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (17.06.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அமைச்சர் தெரிவித்தாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களும்,  பக்தர்கள் தரிசனத்திற்கு ஏற்றவகையில் இருக்க வேண்டும்.

2014ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்ட மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிகள் விரைந்து முடித்து ஆகஸ்ட் மாதத்திற்குள்ளாக குடமுழுக்கை நடத்துவதற்குண்டான அறிவுரைகளை வழங்கி இருக்கின்றோம்.அந்த பணியை வேகப்படுத்தி பெரியசாமிமலை கோயிலுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றி ஓராண்டுக்குள்ளாக பக்தர்கள் சிரமமின்றி இங்கே வந்து தரிசனம் செய்வதற்கும் எப்படி தொன்மை மாறாமல் பழைய நிலையிலேயே இந்தத்திருக்கோயிலை மீண்டும் புதுப்பிப்பதற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களுடைய உத்தரவைப்பெற்று, இந்து சமய அறநிலையத்துறை முழுமையாக இந்த பணிகளை மேம்படுத்துவதற்கான அதிக அக்கறையோடு செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். திருக்கோயில் சார்பாக விரைவில் தங்கத்தேர் இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  திருத்தேர் நிறுத்தப்பட்டுள்ள இடம் மற்றும் திருக்கோயில் வளாகத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் துறை அலுவலர்களுக்கு  அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து, செல்லியம்மன் பெரியசாமி கோயிலில் சேதமடைந்துள்ள சிலைகளை பார்வையிட்டேன்.  தொன்மை மாறாமல் இந்த பழங்காலச் சிலைகளை புதுப்பிக்கவும், செல்லியம்மன் கோயில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளதால் திருக்கோயிலை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், இந்தக் கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் வந்துசெல்ல ஏதுவாக சாலை அமைத்திட வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் போதிய பாதுகாப்புகள் உருவாக்கப்படுவதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஏற்படுத்தித்தருவோம். பாதுகாப்பு வசதிகள் என்னென்ன செய்தால் மீண்டும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும். அனைத்து கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி அதற்கு உண்டான போதிய பணியாளர்களை நியமித்து பழைய நிலைக்கு, மீண்டும் எந்த விதமான பிரச்சனையும் ஏற்படாத அளவிற்கு அனைத்து வசதிகளையும் மேம்படுத்த திட்டமிட்டு செயல்படுத்தப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 38 வருவாய் மாவட்டங்களுக்கு வட்டாட்சியர்கள், நிலஅளவையர்கள் மற்றும் உதவியாளர்கள் என 114 பணியிடங்களுக்கு இந்து சமய அறநிலையதுறை சார்பில் ஓராண்டுக்கு அவர்கள் பணிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு இது வரையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களை ரேவர்டு கருவி மூலமாக அளவீடு செய்து, கல் பதித்து, அதற்கு வேலிகளை அமைத்து வருகிறோம். அதோடு மட்டுமில்லாமல் நீதிமன்ற வழக்குகளில் நிலுவையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நிலங்களை மீட்டு இருக்கின்றோம். அந்தவகையில் இந்த மாவட்டத்திற்கும் தனிகவனம் செலுத்தி வாடகை நிலுவையில் இருப்பதை வாடகை வசூலித்து திருக்கோயில் பயன்பாட்டிற்கும், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை ஆக்கிரமிப்பை அகற்றி திருக்கோயிலுக்கு சொந்தமாக்குகின்ற பணிகளும் துரிதப்படுத்தப்படும்.  ஒரு சில இடங்களில் திருக்கோயில் பெயரில் இருந்ததையே பட்டா மாற்றம் செய்து இருக்கின்றார்கள்.

அப்படி பட்டா மாற்றம் செய்யப்பட்டதையும், ஒத்துப்போகின்ற நிலங்கள் ஒத்துப்போகாத இடங்கள் என்று இரு வகைப்பாடு இருக்கின்றன. இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒத்துப்போகின்ற இடங்களையும் தற்போது பதிவேற்றம் செய்து கொண்டு வருகின்றோம். ஒத்துப்போகாத இடங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் மேல்முறையீடு செய்து அந்த நிலங்களை மீட்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: