அடமானம் வைத்த நிலத்தை விற்று மோசடி செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி புகார்தாரரின் வீட்டின் முன் தர்ணா: பெரியபாளையம் அருகே பரபரப்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே   அடமானம் வைத்த நிலத்தை நிலத்தை விற்று மோசடி செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார்தாரரின் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.   திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம்  பகுதியை சேர்ந்தவர் முனவருனிசா (60). இவரது கணவர் இறந்த பின்னர் கடந்த 2017ம் ஆண்டு தன் வீட்டை ஊத்துக்கோட்டை அருகே  கீழ் கருமனூர் கண்டியைச் சேர்ந்த திராவிட பாலு என்பவரிடம்  அடமானம் வைத்து ரூ.1 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.    ஆறு மாதத்தில் நிலத்தை மீட்க சென்ற பொழுது  அடமானம் வைத்த நிலத்தை திராவிட பாலு  மற்றொருவருக்கு ரூ 30 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது.  இதனால் அதிர்ச்சி அடைந்த முனவருனிசா இதுகுறித்து  அளித்த புகாரின்பேரில் ஊத்துக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சாரதி விசாரணை மேற்கொண்டதில் திராவிட பாலு,  முனாவருனிசாவின் வீட்டை நிரஞ்சன் என்பவருக்கு அடமானம் வைத்து ரூ 30 லட்சம் கடன் பெற்றதை ஒப்புக்கொண்டார்.

 பின்னர் நிரஞ்சனுக்கு 21 லட்சம் கொடுத்ததாகவும் மீதமுள்ள 9 லட்சத்தை கொடுத்து பத்திரத்தை மீட்டு திருப்பி  உரிமையாளரான முனவருனிசாவுக்கு  ஒப்படைப்பதாக எழுத்துப்பூர்வமாக போலீசாரிடம் வாக்குறுதி அளித்தார். ஆனால் காலங்கள் கடந்து சென்ற நிலையில் இன்னும் பத்திரத்தை மீட்டு தராததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல்துறை முதல் முதலமைச்சர் வரை பல்வேறு புகார்களை அளித்திருந்தாலும் புகாரின் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் திராவிட பாலு என்பவரின் வீட்டிற்கு முன்பு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .இதுகுறித்து தகவலறிந்து வந்த ஊத்துக்கோட்டை காவல்துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் பத்திரத்தை மீட்டுத் தரும் வரையில் தாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம் எனவும் புகார் கொடுத்த நபரின் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: