மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்ததால் பாஜவில் இருந்து ராஜஸ்தான் எம்எல்ஏ நீக்கம்

ஜெய்பூர்: தமிழகம் உள்பட பல மாநிலங்களில் காலியான மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில், கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலங்களில் 16 மேலவை எம்பி பதவிக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் 4 இடங்களுக்கான மேலவை எம்பிக்கள் கடந்த 10ம் தேதி தேர்வு செய்யப்பட்டனர். அங்கு, வாக்குப்பதிவின்போது, பாஜ எம்எல்ஏ ஷோபாராணி குஷ்வா, கட்சியின் உத்தரவை மீறி காங்கிரஸ் உறுப்பினரை ஆதரித்து வாக்களித்ததாக தெரியவந்தது.

இதையடுத்து அன்றைய தினமே அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இடைநீக்கம் செய்யப்பட்டார். அந்த நோட்டீசில் 19ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க கேட்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்குள் அவரை கட்சியில் இருந்து நீக்கம் செய்வதாக பாஜ மத்திய ஒழுங்கு குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குழுவின் செயலாளர் ஓம் பதக் இதுபற்றி அவருக்கு அனுப்பிய அறிக்கையில், ‘நீங்கள் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறீர்கள். இதர அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறீர்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. ஷோபாராணி, பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ குஷ்வாவின் மனைவி ஆவார். 2018 சட்டசபை தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: