மக்கள் மனம் அறிந்து நடக்கிற ஆட்சியே திராவிட மாடல்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

பெரம்பூர்: சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் தெற்கு பகுதி திமுக சார்பில் கலைஞரின் 99வது பிறந்த நாள் மற்றும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பெரம்பூர் பழனி ஆண்டவர் கோயில் தெரு அருகே நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் முன்னிலை வகித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில், சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து தையல் இயந்திரம், சில்வர் குடம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை 500 பேருக்கு அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது, `தமிழகத்தை எத்தனையோ முதல்வர்கள் ஆண்டுள்ளனர். ஒவ்வொரு முதல்வருக்கும் ஒவ்வொரு அடையாளம் இருக்கிறது. ஆனால் கலைஞருக்கு பல அடையாளங்கள் உள்ளது. திரைப்படத்துறை என்று சொன்னால் 76 திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி திரையுலகத்தின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர். கலைஞர் ஒரு சொற்பொழிவாளர். சிறந்த அரசியல்வாதி. அவருக்கு நிகரான அரசியல்வாதி உலகத்திலேயே இல்லை. 50 ஆண்டுகால சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 13 முறை நின்று ஒருமுறை கூட தோற்காமல் வெற்றி பெற்றவர். 5 முறை முதல்வராக இருந்தவர். இவர் ஒரு சிறந்த அரசியல்வாதி. திராவிட மாடல் ஆட்சி என்பது மக்களாட்சி. மக்கள் மனம் அறிந்து நடக்கிற ஆட்சி. இந்த ஆட்சி அனைவரும் சமம் என்கிற ஆட்சி. நமது உரிமையை பாதுகாக்கிற ஆட்சி’ என பேசினார்.

Related Stories: