ஆந்திராவில் ஆம்னி பஸ் கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 5 பேர் பலி-40 பேர் படுகாயம்

திருமலை : ஆந்திராவில் ஆம்னி பஸ் கவிழ்ந்து ஒடிசாவை சேர்ந்த குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலம், சின்னப்பள்ளியில் இருந்து ஆந்திர மாநிலம், விஜயவாடாவுக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 45 பேர் பயணம் செய்தனர். ஆந்திர மாநிலம், சிந்தூர் மண்டலம், எடுகுரல்லப்பள்ளி அருகே நேற்று அதிகாலை வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 42 படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அவ்வழியாக சென்ற வாகனஓட்டிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து ஏடுகுரல்லப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் அங்கு விரைந்து வந்து 3 சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பத்ராசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், படுகாயமடைந்தவர்களும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். 40 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஏடுகுரல்லப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஓடிசாவிலிருந்து வந்த ஆம்னி பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், தனேஷ்வர் தலபதி(24), ஜீது ஹரிஜன்(5), சுனேனா ஹரிஜன்(2) உட்பட 5 பேர் உயிரிழந்தனர். ஆம்னி பஸ்சில் பயணம் செய்த அனைவரும் ஒடிசாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்’ என்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: