சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிரசாரம்-தங்கச்சிமடம் வாலிபருக்கு வரவேற்பு

ராமேஸ்வரம் :சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொண்ட தங்கச்சிமடம் மாற்றுத்திறனாளி இளைஞர் நேற்று ராமேஸ்வரம் திரும்பினார். ராமேஸ்வரம் அருகிலுள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்தவர் தினா. மாற்றுத்திறனாளியான இவர் தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழல், கடல் வளம், இயற்கை வளத்தை பாதுகாக்கவும், பாலித்தீன் பைகள் பயன்பாட்டை தவிர்க்கவும் வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரத்தை கடந்த மாதம் துவக்கினார்.

கடந்த மாதம் 12ம் தேதி ராமேஸ்வரம் பேக்கரும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து பிரச்சார பயணத்தை துவக்கியவர் தனது மூன்று சக்கர ஸ்கூட்டரில் பாம்பன், மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி வழியாக மதுரை சென்று அங்கிருந்து தேனி, கம்பம், திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, பவானி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, புதுச்சேரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி சென்று நேற்று மீண்டும் ராமேஸ்வரத்தை வந்தடைந்தார்.

கடந்த 30 நாட்களில் 2457 கி.மீ தூரம் ஸ்கூட்டரில் பயணித்த இவர் வழியில் தங்கும் இடங்களிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும், கடல் வளத்தை பாதுகாக்கவும் பிரச்சாரம் செய்தார். துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களிடையே வினியோகம் செய்துள்ளார். மேலும் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் ஆங்காங்கே மரக்கன்றுகளை நட்டும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். நேற்று ராமேஸ்வரம் வந்து சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் தினாவை பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும் வரவேற்று பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: