ஆந்திர சட்டசபை தேர்தலை முன்னிட்டு பவன் கல்யாண் சினிமாவுக்கு முழுக்கு

ஐதராபாத்: ஆந்திர சட்டசபை தேர்தலை முன்னிட்டு தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக நடிகர் பவன் கல்யாண் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஓய்வெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. எதிர்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு, ஆளுங்கட்சிக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகிறார். காங்கிரஸ், பாஜ கட்சிக்கு போதுமான செல்வாக்கு இல்லை. இந்த நிலையில் தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், பாஜவுடன் கூட்டணி வைத்து வரும் 2024ம் பேரவை தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

அதேபோல் அதே ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பாஜவுடன் தெலுங்கு தேசம் கட்சியும் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும் என்று பவன் கல்யாண் சமீபத்தில் கூறினார். ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், பவன் கல்யாணின் கருத்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பவன் கல்யாண் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘ஆந்திராவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக கட்சித் தொண்டர்களை தயார்படுத்த வேண்டியுள்ளது. அதனால், சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்க உள்ளேன். வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ள உள்ளேன். வரும் விஜயதசமி நாளில் திருப்பதியில் இருந்து எனது பிரசார பயணம் தொடங்கும்’ என்றார்.

Related Stories: