புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக சரத் பவார் நிறுத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி, அடுத்த மாதம் 18ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதிய ஜனாதிபதிக்கான வேட்பாளர் தேர்வு செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மீண்டும் ராம்நாத் கோவிந்த்தையே நிறுத்துவதா அல்லது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை போட்டியிடச் செய்வதா அல்லது பழங்குடியின பெண் தலைவர் யாருக்காவது வாய்ப்பு தருவதா என பல கோணங்களில் பாஜ ஆலோசனை நடத்தி வருகிறது.அதே சமயம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளரை களமிறக்க தீவிர முயற்சிகள் நடக்கிறது. இதில் எதிர்க்கட்சிகளின் முதல் முன்னுரிமையாக இருப்பவர் சரத் பவார். பழுத்த அரசியல்வாதியான சரத் பவாரை ஜனாதிபதி பதவிக்கு பொது வேட்பாளராக களமிறக்கலாம் என பல எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே ஏற்கனவே ஆலோசனை நடத்தி உள்ளார். அதைத் தொடர்ந்து அவர், சோனியாவின் விருப்பத்தை, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து ஆதரவு கோரி உள்ளார். இந்த விஷயத்தில் சிவசேனா, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் முன்னாள் மத்திய அமைச்சரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான சரத் பவார் பொது வேட்பாளராக போட்டியிட வேண்டும் என விரும்புகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவின் விருப்பமும் அதுவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் தொலைபேசி மூலம் சரத் பவாரை தொடர்புகொண்டு பேசி உள்ளார். அத்துடன் ஆம் ஆத்மி கட்சியின் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் மும்பை சென்று சரத் பவாரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். இடதுசாரிக் கட்சிகளுடனும் சரத்பவாருக்கு சுமூக உறவு உள்ளது. பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் முன்னாள் அகிலேஷ் யாதவ் ஆகியோருடன் பவார் நல்லுறவு பேணி வருகிறார்..தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத்பவார் பல மூத்த அரசியல்வாதிகளுக்கு நன்கு பரிச்சயமானவர். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. மகாராஷ்டிராவில் பாஜ, சிவசேனா கூட்டணி கட்சிகளாக இருந்த போது, சரத் பவார் தான் ராஜதந்திரம் செய்து, சிவசேனா கட்சியை கூட்டணியிலிருந்து பிரித்து, மகா விகாஸ் அகாடி என்கிற புதிய கூட்டணியை உருவாக்கி, ஆட்சியை பிடிக்கச் செய்ததில், முக்கிய பங்களிப்பு சரத் பவாருடையது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே பாஜவுக்கு சரியான போட்டியான நபர் என்பதால் சரத் பவார், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படும் பட்சத்தில், அது 2024ம் ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தலில் வலுவான கூட்டணி அமைவதற்கும் அடித்தளமாக இருக்கும் என்பது நிச்சயம்.
பாஜவுக்கு பலமில்லைஜனாதிபதி தேர்தலில் 4,809 எம்பி, எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர். அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப எம்பி, எம்எல்ஏக்களின் வாக்குகளுக்கு மதிப்பு வழங்கப்படும். அந்த வகையில் மொத்த வாக்கு மதிப்பு 10 லட்சத்து 86 ஆயிரத்து 431 ஆகும். இதில், 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்கு பெறுபவர் வெற்றி பெற்றவர் ஆவார். இதில், பெரும்பான்மை பலத்தை பெற பாஜவுக்கு 13,000 ஓட்டுகள் குறைவாக உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பாஜ தரப்பில் ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்ட போது, அவருக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் ஆதரவு தந்தனர். ஆனால் இம்முறை சந்திரசேகரராவ் பாஜவை கடுமையாக எதிர்த்து வருகிறார். இதனால் பாஜவுக்கு போதிய பெரும்பான்மை பலம் இல்லாததால், சரத்பவார் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அதையே பாஜ ஏற்கவும் வாய்ப்புள்ளது.