காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிடி ஸ்கேன் அறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது-நோயாளி, மருத்துவர் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

காரைக்கால் : காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிடி ஸ்கேன் அறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது நோயாளிகள்,மருத்துவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.காரைக்கால் மாவட்ட அரசு பொது மருத்துவமனை, கடந்த சில ஆண்டுகளாக, பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு ஏற்ப இல்லாததால், சமூக ஆர்வலர்களும், அரசியல் பிரமுகர்களும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் நிலையை ஆய்வு செய்தார்.

இந்நிலையில், காரைக்கால் அரசு மருத்துவமனையில், சிடி ஸ்கேன் அறையின் சிமென்ட் மேற்கூரை நேற்று பிற்பகல் திடீரென இடிந்து விழுந்ததால், அதன் கீழே இருந்த குளிரூட்டப்பட்ட அறைக்கான தர்மாகோல் மேற்கூரை சிடி ஸ்கேன் மேல் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சிடி ஸ்கேன் அருகே துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவமனை ஊழியர்கள், அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர். சிடி ஸ்கேன் அறையில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த காரைக்கால் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் நாஜிம், சேதமடைந்த இடத்தை பார்வையிட சென்றார்.

அதற்கு மருத்துவமனை ஊழியர்கள், ஸ்கேன் அறை தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது என்றதால், மருத்துவமனை அதிகாரிகளிடம் எம்எல்ஏ உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, சிடி ஸ்கேனின் நிலையை உரிய நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்யுமாறு வலியுறுத்தி சென்றார்.

Related Stories: