மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த பாஜ கட்சி நிர்வாகிக்கு 15 நாள் நீதிமன்ற காவல்: திருவில்லிபுத்தூர் கோர்ட் உத்தரவு; கட்சியில் இருந்தும் நீக்கம்

திருவில்லிபுத்தூர்: அருப்புக்கோட்டையில் நர்சிங் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த பாஜ நிர்வாகியான கல்லூரி தாளாளரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, பழைய பஸ் நிலையம் ரோடு, தெற்குத்தெரு பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர் தாஸ்வின் ஜான் கிரேஸ். விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜ சிறுபான்மை பிரிவு தலைவராக உள்ளார். இவர், தனது கல்லூரியில் படிக்கும் 2ம் ஆண்டு மாணவி ஒருவருக்கு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து கல்லூரி மாணவ, மாணவியர் கல்லூரி தாளாளரை கைது செய்யக்கொரி நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தாளாளர் தாஸ்வின் ஜான் கிரேஸ் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவு திருவில்லிபுத்தூர் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், தாஸ்வின் ஜான் கிரேஸ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து தாஸ்வின் ஜான் கிரேஸ் விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பாஜவிலிருந்து நீக்கம்: இதற்கிடையே, விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் பாண்டுரங்கன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘புக்கோட்டையை சேர்ந்த நர்சிங் கல்லூரி தாளாளர் தாஸ்வின் ஜான் கிரேஸ் கட்சி பொறுப்பில் சரியாக செயல்படாததால், மூன்று மாதங்களுக்கு முன்பு, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக அறியப்பட்ட செய்தியின் அடிப்படையில், அவர் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுகிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: