பண மோசடி வழக்கு!: டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை மேலும் 5 நாள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி..!!

டெல்லி: பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை மேலும் 4 நாட்கள் காவலில் விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறை சில நாட்களுக்கு முன்பு கைது செய்தது. கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனத்தின் சட்டவிரோத பரிபரவர்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்தது. சத்யேந்தர் ஜெயினை ஜூன் 9ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இன்று அவருடைய காவல் முடிந்திருக்கும் நிலையில், சத்யேந்தர் ஜெயினை மேலும் 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஜூன் 13ம் தேதி அவரை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் சத்யேந்தர் ஜெயின் தொடர்புடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 2.83 கோடி ரூபாய், 133 தங்க நாணயங்கள் உள்ளிட்ட 1.80 கிலோ தங்கத்தை அமலாக்கத்துறை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

Related Stories: