சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் அறநிலையத்துறையின் ஆய்வுக்கு ஒத்துழைப்பதே மனுநீதி: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை:முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், கே.பி.பார்க் பகுதி-2 , சத்தியவாணி முத்து நகர் பகுதியில் உள்ள இந்த 178 குடும்பங்களை சுமூகமாக  தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியான கே.பி.பார்க் பகுதி-2 திட்டப்பகுதியில் மறுகுடியமர்வு செய்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமை வகித்தார். கூட்டத்தில், மேயர் பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நேற்று அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலைப் பொறுத்தவரை அது பொதுக் கோயில் என்று தான் ஏற்கெனவே உயர் நீதிமன்ற தீர்ப்புகள் வரப்பெற்றுள்ளன. அப்படி பொதுக் கோயிலாக இருக்கின்ற ஒரு திருக்கோயிலில் இருந்து புகார்கள் எழும்பட்சத்தில், பொதுக் கோயிலுக்குச் சென்று புகாரின் மீது விசாரணை நடத்தலாம். இது சட்டத்தின் ஆட்சி என்பதால், உரிய சட்டத்தின் படி கோயில் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் தான் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றுள்ளனர். மடியிலே கனமில்லை என்றால், வழியிலே பயமில்லை என்பார்கள். எந்தவிதமான பிரச்னையும் இல்லை என்றால், ஆய்வு செய்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுதான் நீதி, மனுநீதி, மனு தர்மம் என்ற அடிப்படையில் தீட்சிதர்களுக்கு வைக்கின்ற அன்பான கோரிக்கை என்று கூறினார்.

* மதுரை ஆதீனத்துக்கு எச்சரிக்கை

மதுரை ஆதீனம் குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்து கூறுகையில், ‘‘இந்த விவகாரம் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். மதுரை ஆதீன விவகாரத்தில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. நாங்கள் பதுங்குவதை பயமாக கருதக்கூடாது. எங்களுக்கும் பாயத் தெரியும். மதுரை ஆதீனம் தொடர்ந்து அரசியல்வாதியைப் போல பேசிக் கொண்டிருப்பதை இந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்காது. தொடர்ந்து அவர் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும்’’என்றார்.

Related Stories: