11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த கால்பந்து வீரரை பிரிந்தார் பிரபல பாடகி ஷகிரா

லண்டன்: லத்தீன் இசையின் ராணி என அன்புடன் அழைக்கப்படும் ஷகிரா(45), இத்தாலி கால்பந்து வீரர் ஜெராட் பிக்கேவுடன் 11 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தார். இந்த ஜோடிக்கு 9 வயதில் ஒரு மகனும், 7 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர். இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையில், “நாங்கள் பிரிவதை உறுதிப்படுத்துகிறோம். இதற்காக வருந்துகிறோம். நாங்கள் எப்போதுமே எங்களது குழந்தைகளுக்கு தான் முன்னுரிமை அளிப்போம். அதனால், அவர்களது தனியுரிமைக்கு நீங்கள் (ரசிகர்கள்) மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவைச் சேர்ந்த ஷகிரா, 1977 ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி பிறந்தார்.

பாடலாசிரியர், பாடகி, நடனக் கலைஞர், நடிகை என பன்முகக் கலைஞராவார். பாப், ராக், லத்தீன் இசையில் பாடக் கூடியவர். இசை உலகில் வழங்கப்படும் உயரிய விருதுகளான கிராமி விருதை 3 முறையும், லத்தீன் கிராமி விருதை 12 முறையும் வென்றிருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக ஷகிரா பாடி, நடனமாடிய “திஸ் டைம் ஃபார் ஆப்பிரிக்கா” பாடல் வெளியானது. அப்போது தான் ஜெராட்டை ஷகிரா சந்தித்தார். அதன் பிறகு இருவரும் காதலிக்கத் தொடங்கினர். இந்நிலையில், 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து குழந்தைகளும் இருக்கும் நிலையில், இந்த ஜோடி பிரிவதாக அறிவித்துள்ளது இவர்களது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: