ஹர்திக் படேல் சூளுரை மோடி சிப்பாயாக பணியாற்றுவேன்

அகமதாபாத், : காங்கிரசில் இருந்து கடந்த மாதம் விலகிய ஹர்திக் படேல், நேற்று பாஜ.வில் இணைந்தார். மோடியின் சிப்பாயாக பணியாற்றப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.குஜராத்தில் படிதார் இன மக்களுக்காக கடந்த 2015ம் ஆண்டு போராட்டங்களை நடத்தியும், பாஜ தலைமையிலான ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்தும் பிரபலமானவர் ஹர்திக் படேல். கடந்த 2019ம் ஆண்டு இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆனால், சமீப காலமாக காங்கிரஸ் தலைமையை தொடர்ந்து விமர்சித்து வந்தார். குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இவர் பாஜ.வின் பக்கம் சாய்ந்து விட்டதாக தகவல் பரவியது.

இந்நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி காங்கிரசில் இருந்து அவர் விலகினார். ஏற்கனவே பரவிய தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக, பாஜ.வில் நேற்று ஹர்திக் படேல் இணைந்தார். குஜராத் பாஜ மாநில தலைவர் சி.ஆர்.படேல், முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்தார். முன்னதாக, ஹர்திக் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘தேசியத்தையும், சமூக நலன்களையும் மனதில் வைத்து புதிய அத்தியாயத்தை தொடங்கப் போகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசத்தின் வளர்ச்சிப் பணிகளில் நானும் ஒரு சிறு சிப்பாயாக  பணியாற்றுவேன்,’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories: