ஓவேலியில் ஆட்கொல்லி யானையை கண்காணிக்க 5 இடங்களில் ‘ஏர்லி வார்னிங்’ கருவி பொருத்தம்: மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை தீவிரம்

கூடலூர்:  ஓவேலியில் ஆட்கொல்லி யானையை கண்காணிக்க 5 இடங்களில் ‘ஏர்லி வார்னிங்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது ஆரூற்றுப்பாறை. இந்த பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரை கடந்த 26ம் தேதி காட்டு யானை தாக்கிக்கொன்றது. பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஆட்கொல்லி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அந்த காட்டுயானை நடமாட்டத்தை கண்காணிக்க சீனிவாசன், விஜய், சங்கர், கிருஷ்ணா ஆகிய 4 கும்கிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஆரூற்றுபாறை அரசுப் பள்ளி வளாகத்தில் முகாம் அமைக்கப்பட்டு அங்கு நிறுத்தப்பட்டு உள்ள கும்கிகள் தினசரி காலையில் யானை நடமாட்டம் உள்ள வனப்பகுதிக்குச் சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இரவு நேரத்தில் யானை குடியிருப்பு பகுதிக்கு வருவதை கண்காணிக்கும் வகையில் 5 இடங்களில் ‘ஏர்லி வார்னிங்’ கருவிகளை வனத்துறையினர் பொருத்தியுள்ளனர். ஆரூற்றுபாறை, பாரம், கிளன்வன்ஸ், பார்வுட் எஸ்டேட் உள்ளிட்ட 5 இடங்களில் அந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ‘‘யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அது பாதுகாப்பான பகுதிக்கு வந்ததும் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்று வனத்துறையினர் கூறினர்.

Related Stories: