கோயிலை புதுப்பிப்பதாக கூறி ரூ.36 லட்சம் வசூலித்து மோசடி சென்னை யூடியூபர் கைது

சென்னை: பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஆலயத்தை புதுப்பிக்க ரூ.36 லட்சம் வசூலித்து மோசடி செய்த யூடியூப்பரை ஆதரவாளரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயில் சிலைகளை கடந்தாண்டு மர்ம நபர்கள் உடைத்ததாக எழுந்த புகாரால் பெரும் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஆனால் மாற்று மதத்தினர்தான் கோயில் சிலைகளை இடித்து தள்ளியதாக இந்து அமைப்பினர் புகார் தெரிவித்தனர்.இந்நிலையில், ஆவடி அடுத்த முத்தாபுதப்பேட்டை மிட்னமல்லியை சேர்ந்த பாஜ ஆதரவாளரும் யூ டியூபருமான கார்த்திக் கோபிநாத் என்பவர் இணையதளம் மூலம், ‘சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஆலயத்தை புதுப்பிக்க இருக்கிறேன். அதற்காக பக்தர்கள் தாராளமாக நன்கொடை வழங்கி உதவலாம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்காக இந்து சமய அறநிலைய துறையினரிடமும் அனுமதி பெற்றிருந்தார். அவரது பதிவை பார்த்த ஏராளமானோர், தாமாக முன்வந்து நன்கொடை வழங்கினர். அந்த வகையில் பக்தர்களிடம் ரூ.36 லட்சம் திரட்டினார் கார்த்திக் கோபிநாத். ஆனால் கோயிலை புதுப்பிக்கும் பணியை தொடங்கவில்லை. நாட்கள் அதிகமானதால், நன்கொடை வழங்கியவர்கள், ‘கோயிலை புதுப்பிப்பதாக நன்கொடை வசூலித்தீர்களே, ஏன் இன்னும் பணியை தொடங்கவில்லை’ என கேள்வி மேல் கேள்வி கேட்டனர். அதோடு, ‘பணியை தொடங்காவிட்டால் பணத்தை திருப்பி கொடுங்கள்’ என்றும் முறையிட்டனர். அதற்கு கார்த்திக் கோபிநாத், ‘விரைவில் கோயில் பணியை தொடங்க இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். அதற்கு பிறகும் தொடங்கியபாடில்லை.

இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், ஆன்லைன் மூலம் ஒரு புகார் செய்தார். அதில், ‘சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஆலயத்தை புதுப்பிக்க இருப்பதாக கூறி சமூக ஆர்வலர் கார்த்திக் கோபிநாத் பணம் வசூலித்துள்ளார். நீண்ட நாட்களாகியும் சொன்னபடி கோயிலை புதுப்பிக்கவில்லை. பணம் வசூலித்து மோசடி செய்த கார்த்திக் கோபிநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனு, ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, நேற்று வீட்டில் இருந்த கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தனர். பின்னர் அவர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: