எனக்கு தகுதி இல்லையா? காங்கிரசுக்கு எதிராக நக்மா போர்க்கொடி: மாநிலங்களவை தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தி

புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாததால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் மகளிரணி பொதுச் செயலாளரான நடிகை நக்மா, ‘18 ஆண்டாகியும் எனக்கு தகுதி இல்லையா?’ என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.மாநிலங்களவையில் 15 மாநிலங்களை சேர்ந்த 57 எம்பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதனால் காலியாகும் இடங்களுக்கு வரும் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், அஜய் மக்கன், ரன்தீப் சுர்ஜேவாலா, இம்ரான் பிரதாப்கர்கி உள்பட 10 பேர் போட்டியிடுகின்றனர்.

இப்பட்டியலில் தனது பெயர் இடம் பெறாததால், காங்கிரஸ் கட்சியின் மகளிரணி பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா போர்க்கொடி தூக்கி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டரில், ` காங்கிரசில் 2003-04 ஆண்டில் இணைந்தபோது மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் சோனியா காந்தி உறுதி அளித்தார். காங்கிரஸ் அப்போது ஆட்சியில் இல்லை. தற்போது 18 ஆண்டுகளாகியும் மாநிலங்களவையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. மகாராஷ்டிராவில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட இம்ரானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனக்கு தகுதி இல்லையா?’ என பதிவிட்டுள்ளார்.

இதே போல், கட்சி தலைமை குறித்து அதிருப்தி தெரிவித்த 23 மூத்த தலைவர்கள் குழுவில் இடம் பெற்றுள்ள குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மாவுக்கு சீட் தரப்படவில்லை. இது காங்கிரஸ் கட்சியில் புதிய அதிருப்தி அலையை உருவாக்கி உள்ளது. மேலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், சட்டீஸ்கரில் கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்கள் அடையாளம் கண்டு கொள்ளப்படவில்லை என்றும், வெளிமாநிலத்தவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பாஜவில் நக்விக்கு வாய்ப்பு இல்லை

பாஜ கட்சி சார்பில் 18 பேர் கொண்ட மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில், தற்போது ஒன்றிய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சராக உள்ள முக்தர் அப்பாஸ் நக்வி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டவர்கள் பெயர்கள் இடம் பெறவில்லை. பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான நிதிஷ் குமார் தனது கட்சி வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏவும் மாநில கட்சி தலைவருமான கீரு மஹதோவை நிறுத்தி உள்ளார். இதனால் அவரது கட்சி சார்பில் ஒன்றிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒரே அமைச்சரான ஆர்சிபி சிங் பதவி பறிபோக உள்ளது. ஒன்றிய அமைச்சரவையில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் முழுமையாக வெளியேற உள்ளது. நிதிஷ் குமாருடனான கருத்து வேறுபாடால் தான் ஆர்சிபி சிங்குக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: