பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் லெய்லா; டிரெவிசான் அசத்தல்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் தகுதி பெற்றார். 4வது சுற்றில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவுடன் (20 வயது, 28வது ரேங்க்) நேற்று மோதிய லெய்லா (19 வயது, 18வது ரேங்க்) 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த அமண்டா 6-4 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. எனினும், 3வது மற்றும் கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த லெய்லா 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 54 நிமிடங்களுக்கு நீடித்தது. மற்றொரு 4வது சுற்றில் பெலாரசின் அலெக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சுடன் (28 வயது, 47வது ரேங்க்) மோதிய இத்தாலி வீராங்கனை மார்டினா டிரெவிசான் (28 வயது, 59வது ரேங்க்), கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டை 7-6 (12-10) என டை பிரேக்கரில் கைப்பற்றினார். அடுத்த செட்டும் இழுபறியாக நீடித்த நிலையில், 7-6 (12-10), 7-5 என நேர் செட்களில் போராடி வென்ற டிரெவிசான் காலிறுதிக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 1 மணி, 59 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. காலிறுதியில் லெய்லா பெர்னாண்டசுடன் மார்டினா டிரெவிசான் மோதுகிறார்.

Related Stories: