திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 2வது நாளாக அலைமோதும் பக்தர்கள்: 48 மணி நேரம் காத்திருப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள் சுமார் 48 மணி நேரமாக காத்திருக்கின்றனர். தமிழகம், ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர். இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தினமும் 30 ஆயிரம் ₹300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் ஆகஸ்ட் மாதம் வரை விற்பனை செய்துள்ளது.

தினமும் இலவச தரிசனத்தில் எவ்வித டிக்கெட்டுகளும் இல்லாமல் அனுமதிக்கப்படுவதால் பக்தர்களின் வருகை அதிகளவில் உள்ளது. தற்போது தினமும் 75 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். ஏழுமலையானை தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் உண்டியல் வருமானமும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கிய பிறகு சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக ₹4 கோடி வருமானம் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ஒரேநாளில் ஏழுமலையான் கோயிலில் 89 ஆயிரத்து 318 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் ₹3 கோடியே 76 லட்சம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர். 48 ஆயிரத்து 539 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். ஞாயிற்றுக்கிழமையான இன்றைய நிலவரப்படி திருமலையில் உள்ள வைகுண்டம் காம்பளக்சில் உள்ள 31 அறைகளும் பக்தர்களால் நிரம்பியுள்ளது. அறைகளுக்கு செல்ல வெளியே  3 கி.மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் காத்திருக்கின்றனர். நேற்றைய தினம் போலவே இன்றும் 2வது நாளாக இலவச தரிசனத்தில் 48 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த பக்தர்கள் 4 மணி நேரத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதனிடையே பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் திருமலைக்கு வரும் பயண திட்டத்தை பக்தர்கள் தற்காலிகமாக மாற்றி கொள்ளுமாறும், முக்கிய பிரமுகர்கள் திருமலைக்கு வருவதை தவிர்க்குமாறும் தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: