பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் காஸ்பர் ரூட் போராடி வெற்றி

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிசில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடந்த ஆடவர் ஒற்றையர் 3ம் சுற்றுப் போட்டியில் ஏடிபி தரவரிசையில்  8ம் இடத்தில் உள்ள காஸ்பர் ரூட்டும், 35ம் இடத்தில் உள்ள லொரென்சோ சோனேகோவும் மோதினர். முதல் செட்டை 6-2 என எளிதாக காஸ்பர் ரூட் கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டில் சோனேகோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, காஸ்பர் ரூட்டை திணறடித்தார். இருவருமே துல்லியமான சர்வீஸ்களை போட்டு தாக்கினர். இருவரின் பிளேஸ்மென்ட்களும் மிக கச்சிதமாக இருந்தன. இதனால் அந்த செட் டை-பிரேக்கரை எட்டியது.

இதையடுத்து டைபிரேக்கர் 7-6 என சோனேகோ வசமானது. அதே வேகத்தில் 3வது செட்டையும் சோனேகோ 6-1 என எடுத்து, பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் சுதாரித்துக் கொண்ட காஸ்பர் ரூட், மிக சரியான சமயத்தில் சோனேகோவின் கேம்களை பிரேக் செய்தார். அவரது இந்த நிதானமான அணுகுமுறை நல்ல பலனை கொடுத்தது. அடுத்த 2 செட்களையும் அவர் 6-4, 6-3 என கைப்பற்றி, ஒரு வழியாக 4ம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

வெளியேறினார் படோசா

தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள ஸ்பெயினின் முன்னணி வீராங்கனை பாவ்லா படோசா, நேற்று ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குடர்மெடோவாவுக்கு எதிரான 3ம் சுற்றுப் போட்டியின் இடையே காயம் காரணமாக வெளியேறினார். இப்போட்டியில் முதல் செட்டை வெரோனிகா 6-3 என கைப்பற்றினார். 2ம் செட்டில் 2-1 என முன்னிலையில் இருந்தார். அப்போது காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக பாவ்லா படோசா அறிவித்தார். இதையடுத்து வெரோனிகா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

படோசா வெளியேறியதையடுத்து பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள வீராங்கனைகளில் போலந்தின் இகா ஸ்வியாடெக்கை தவிர, தற்போது ஒருவரும் போட்டியில் இல்லை. இன்னும் காலிறுதி போட்டிகள் கூட நடைபெறாத நிலையில், இகா ஸ்வியாடெக்கை தவிர முன்னணி வீராங்கனைகள் அனைவரும் தோல்வியடைந்து விட்டனர்.

Related Stories: