ஏரி மண் குவாரியில் மாமூல் கேட்டு மிரட்டல்: ரவுடி கைது

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் கிராமத்தின் பெரிய ஏரி, பொதுப்பணித் துறை சார்பில் ஆழப்படுத்தும் பணி நடக்கிறது. இந்த பணியை தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மண் குவாரி நடக்கும் இடத்துக்கு பிரபல ரவுடி பட்டரவாக்கம் சிவா (45) சென்றார். அங்கு, மண் எடுக்கும் நிறுவனம், தனக்கு ரூ.10 லட்சம் தர வேண்டும் என கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

அதற்கு அவர்கள் அவ்வளவு தொகை தர முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், லாரிகள் வெளியே செல்லும் வழியில், தனது காரை குறுக்கே நிறுத்தி, காரில் இருந்த 2 அரிவாள்களை, கார் மீது வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனியார் ஒப்பந்த ஊழியர்கள் திருப்போரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லில்லி, எஸ்ஐ ராஜா, எஸ்எஸ்ஐ பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பிரபல ரவுடி பட்டரவாக்கம் சிவாவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரை, காவல் நிலையம் கொண்டு சென்று தீவிரமாக விசாரிக்கின்றனர். கைது செய்யப்பட்ட பட்டரவாக்கம் சிவா மீது மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி உள்பட பல காவல் நிலையங்களில் 12க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி, குண்டு வீச்சு, ஆள் கடத்தல், மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: