கும்பகோணம்: சேலம் சிவாச்சாரியாரை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன்(45). இவர் தனது தந்தை ராமமூர்த்தியுடன், தஞ்சை மாவட்டம் திருவைக்காவூரில் வசித்து வந்தார். மேலும், அங்குள்ள சிவன் கோயிலில் ராமமூர்த்தியும், ஆடுதுறை சிவன் கோயிலில் மணிகண்டனும் சிவாச்சாரியார்களாக பூஜை செய்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2015 ஜூன் 12ம் தேதி திருவைக்காவூரை சேர்ந்த கார்த்தி(39), சிவாச்சாரியார் மணிகண்டனிடம் தனது திருமணத்திற்கு புரோகிதம் செய்ய வேண்டும் என அழைத்துள்ளார். ஆனால், ஏற்கனவே வேறு ஒரு திருமணத்திற்கு முன் பணம் வாங்கி விட்டதால் வர இயலாது என மணிகண்டன் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த கார்த்தி, அவரது உறவினரான அரவிந்தராஜ்(35), ராஜா(எ)ஹரிராஜா(25), வெங்கடேசன்(32), வேலு (எ) ஜெயவேல்(36) ஆகியோர், கடந்த 2015 ஜூன் 14ம் தேதி பட்டவர்த்தி பகுதியில் மறைந்து இருந்து கோயிலுக்கு சென்ற மணிகண்டனை வழி மறித்து கட்டையால் தாக்கினர்.
இதில், பலத்த காயமடைந்த மணிகண்டன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2015 ஜூன் 23ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தி, அரவிந்தராஜ், ஹரிராஜா, வெங்கடேசன், ஜெயவேல் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹரிராஜா ஏற்கனவே இறந்து விட்டார்.
கும்பகோணம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நீதிபதி ராதிகா நேற்று தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் கார்த்தி, அரவிந்தராஜ், வெங்கடேசன், வேலு ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், உயிரிழந்த மணிகண்டன் குடும்பத்தாருக்கு அரசு சார்பில், ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
