சென்னை: டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் போலீசார் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று போதையில் முதல்வர் காருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், சேலையூர் பகுதியில் இருந்து வினோத்குமார் பேசுகிறேன். டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டது. இதனால், சிலர் தன்னை தாக்கியதாக கூறி தெரிவித்துள்ளார். அப்போது அங்கு இருந்த போலீசாரிடம், நான் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், முதல்வர் வீடு மற்றும் அவர் பயன்படுத்தும் காருக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். உடனே கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி, போலீசார், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் வீடு, அவரது காரை சோதனை செய்தனர். அப்போது எந்த வெடி குண்டும் சிக்கவில்லை. இதனால், இது வெறும் புரளி என தெரியவந்தது. போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரின் செல்போன் எண்ணை வைத்து அவரை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது, அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
