சென்னை: செக் மோசடி வழக்கில் திரைப்பட இயக்குநர் லிங்குசாமிக்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து சென்னை அல்லிகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்பட இயக்குநர் லிங்குசாமிக்கு சொந்தமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பேஸ்மேன் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் கடந்த 2016ம் ஆண்டு 35 லட்ச ரூபாய் கடனாக பெற்றிருந்தது. நீண்ட நாட்களாக இந்த கடன் தொகையை லிங்குசாமி செலுத்தாததால், கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 48 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது. இதற்காக லிங்குசாமி கொடுத்த காசோலை பணம் இல்லாமல் திரும்ப வந்தது.
இதையடுத்து, பேஸ்மேன் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் குமார் கடந்த 2018ம் ஆண்டு சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் லிங்குசாமி, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிகுளம் நீதிமன்ற நீதிபதி மகாலட்சுமி, இயக்குநர் லிங்குசாமி, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 48 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் இயக்குநர் லிங்குசாமி, பேஸ்மேன் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும். தர தவறினால் கூடுதலாக 2 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
