தவளக்குப்பம் அருகே ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் 5 வாலிபர்கள் கைது-6 கிராம் பாக்கெட் ரூ.500க்கு விற்றனர்

தவளக்குப்பம் :  புதுச்சேரி தவளக்குப்பம் அருகே ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் 5 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த அபிஷேகப்பாக்கம் அருகிலுள்ள தேடுவார்நத்தம் குருநகரில் ஒரு கும்பல் கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தவளக்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி நின்ற 5 பேரை பிடித்து சோதனையிட்டதில் கஞ்சா வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர்கள் நல்லவாடு   குமரகுரு (19), தானம்பாளையம் பிளேடு விஷ்ணு (20), கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் பில்லாளிதொட்டி சூர்யா (23), மணமேடு அருள்குமரன் (26), நோணாங்குப்பம் சந்தோஷ் (19) ஆகியோர் என தெரியவந்தது.

குமரகுரு கூறியதன்பேரில், பிளேடு விஷ்ணு திருவண்ணாமலை, சென்னை போன்ற இடங்களுக்கு சென்று மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து, அவற்றை குமரகுருவும், பிளேடு விஷ்ணுவும் சேர்ந்து, சூர்யா உள்ளிட்ட 3 பேரிடமும் விற்பனை செய்ய கொடுத்ததும், அவற்றை தேடுவார்நத்தம் குமரகுரு நகரில் வைத்து சிறு, சிறு பொட்டலங்களாக போட்டு விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. 6 கிராம் கொண்ட ஒரு பாக்கெட் ரூ.500க்கு விற்றதும் தெரிந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த ஒரு கிலோ 350 கிராம் கஞ்சா, பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப்பதிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: