சர்வதேச சுற்றுலா மையங்கள் பட்டியலில் கொடைக்கானல்: அமைச்சர் மதிவேந்தன் உறுதி

கொடைக்கானல்: சர்வதேச சுற்றுலா மையங்களின் பட்டியலில் கொடைக்கானல் இடம் பெறுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழக சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கொடைக்கானல் மன்னவனூர் பகுதியில் சாகசச் சுற்றுலா ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக தமிழக அரசு ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்தப்பகுதியில் கேம்பிங் முறையில் சுற்றுலாப் பயணிகள் தங்கிச் செல்வதற்குரிய இடங்களும் ஆய்வு செய்யப்பட்டது. கொடைக்கானல் சுற்றுலா வளர்ச்சி கழக தங்கும் விடுதியும் ஆய்வு செய்யப்பட்டது. இவை அனைத்தும் மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். விரைவில் ஹெலிகாப்டர் சுற்றுலா கொடைக்கானலில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேச சுற்றுலா மையங்களில் பட்டியலில் கொடைக்கானல் இடம் பெறுவதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’’ என்றார்.

ஆய்வின்போது பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், எம்பி வேலுச்சாமி, சுற்றுலாத்துறை செயலாளர் சந்திப் நந்தூரி, கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, நகர்மன்ற துணைத்தலைவர் மாயக்கண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: