பைனான்சியர் கொலை வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த ரவுடியிடம் போலீசார் தீவிர விசாரணை

சென்னை:  பைனான்சியர் கொலை வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த ரவுடியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பைனான் சியர் ஆறுமுகம் (36). கடந்த 18ம் தேதி செனாய் நகர் பகுதியில் வெட்டிக்கொல்லப்பட்டார். கொலை சம்பந்தமாக கடந்த 20ம் தேதி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் பிரபல ரவுடி உஷ் (எ) சந்திரசேகர் (28), இவரது கூட்டாளி ரவுடி ரோகித்ராஜ் (32) ஆகியோர் சரணடைந்தனர். பின்னர், இருவரையும் கடலூர் சிறையில் அடைத்தனர். இவர்களை நேற்று முன்தினம் அமைந்தகரை போலீசார் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

இதில், சந்திரசேகர், ரோகித்ராஜ் ஆகியோர் பிரபல ரவுடி மதுரை பாலாவுடன் சேர்ந்து வெளியே வந்ததாக கூறினர். வெட்டிக்கொல்லப்பட்ட ஆறுமுகத்தின் நண்பர் சிவகுமார் (42). இவர் ஆறுமுகத்துடன் தொழில் பார்ட்னராக இருந்து வந்தார். கடந்த 2020ம் ஆண்டு ரவுடி ரோகித்ராஜ் தலைமையிலான கும்பல், சிவகுமாரை வெட்டிக்கொலை செய்துள்ளனர். இதனால், தன்னை கொலை செய்ய ஆறுமுகம் தருணம் பார்த்துக் கொண்டிருப்பதாக உணர்ந்த ரோகித்ராஜ், முன்கூட்டியே ஆறுமுகத்தை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி சம்பவத்தன்று வெட்டிக் கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, கொலை வழக்கு சம்பந்தமாக தேடப்பட்ட சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த மீன் (எ) பிரவீன்குமார் (28) நேற்று முன்தினம் மாலை சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மாடியில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து, அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த எழும்பூர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்த நிலையில் பிரவீன்குமாரை காவலில் எடுத்து நேற்று விசாரித்தனர். இன்றும் விசாரணை நடக்கிறது.

Related Stories: