செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் தொடர் பைனலில் பிரக்ஞானந்தா டிங் லிரெனுடன் மோதல்

சென்னை: உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் ஆன்லைன்  செஸ் தொடரின் பைனலில் தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா சீனாவின் டிங் லிரெனுடன் மோதுகிறார்.உலகின் சிறந்த வீரர்கள் 16 பேர் பங்கேற்கும்  ‘மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் தொடரின்’  செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் ஆன்லைன்  சதுரங்கப் போட்டி  பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள தமிழக  வீரர்  பிரக்ஞானந்தா (16 வயது) அரையிறுதிக்கு முன்னேறினார். அதில் நெதர்லாந்தைச் சேர்ந்த அனீஷ் கிரி உடன் மோதினார். இருவரும் விடாப்பிடியாகப் போராடியதால் ஆட்டம்  2-2 என்ற கணக்கில் டிரா ஆனது. அதனால்  வெற்றியாளரை தீர்மானிக்க  டை பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. அதில் பிரக்ஞானந்தா 1.5 - 0.5 என்ற புள்ளி கணக்கில்  வென்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினார். பைனலில் அவர் உலகின் 2ம் நிலை வீரரான  டிங் லிரெனை (சீனா) எதிர்கொள்கிறார். இறுதிப் போட்டி 2 நாட்களாக நடைபெறுகிறது (மே 25,26).

இரவினில் ஆட்டம்... பகலினில் பரீட்சை!

சென்னை  தனியார் பள்ளி ஒன்றில் பிரக்ஞானந்தா  +1 படிக்கிறார்.  இப்போது அவருக்கு பொதுத் தேர்வு நடக்கிறது. அதனால் பகலில் தேர்வு எழுதிவிட்டு,  இரவில்  செஸ் போட்டியில் பங்கேற்கிறார். உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் போட்டியில் பங்கேற்பதால் எல்லோருக்கும் வசதியான நேரத்தில் போட்டி நடக்கிறது. அதனால் இந்திய நேரப்படி இரவு 9.30க்கு தொடங்கி அதிகாலை 2.00 மணி வரை கூட நீள்கிறது. ஆனாலும், பொதுத் தேர்வு எழுதிக் கொண்டே  போட்டியிலும் அசத்திக் கொண்டு இருக்கிறார் பிரக்ஞானந்தா.

Related Stories: