ராணிப்பேட்டை மாவட்டத்தில் 27ம் தேதி 3 மணிநேரம் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் பணி-கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் 27ம் தேதி 3 மணிநேரம் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் பணி நடப்பதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘மீண்டும் மஞ்சள் பை’ என்கிற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் வரும் 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் 10 மணி வரை 288 பஞ்சாயத்துகள், 8 பேரூராட்சிகள் மற்றும் 6 நகராட்சிகளில் உள்ள பிளாஸ்டிக்குகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதில், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.

அதேபோல், கடைகளிலும் ரெய்டு நடத்தி பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்படும். ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் சீரிய நடவடிக்கைகளின் மூலமாக டீ கடைகள், பழரசக் கடைகளில் பேப்பர் கப்கள் பயன்பாடு தவிர்க்கப்பட்டு கண்ணாடி டம்ளர்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதேபோல், காய்கறி கடைகள், இறைச்சி கடைகளிலும் மந்தாரை, வாழை இலைகளைக் கொண்டு இறைச்சி வகைகள் பார்சல் செய்து வழங்கப்படுகிறது.

பொதுமக்களும் தற்போது வீட்டில் இருந்து துணிப்பைகள், இறைச்சி வாங்குவதற்கான பாத்திரங்கள் ஆகியவற்றை கொண்டு வந்து இறைச்சி வகைகளை வாங்கிச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி பிரதிநிதிகள் ராணிப்பேட்டை மாவட்டத்தை  பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக உருவாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் நேற்று ரயில்வே ஸ்டேஷன் பகுதி உட்பட பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் அகற்றும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

2 மாதங்களில் 27 டன் பிளாஸ்டிக் பறிமுதல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் நடந்த சோதனையில் இதுவரை 27 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நுண் துகள்களாக மாற்றி பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கவும், சிமெண்ட் தொழிற்ச்சாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

Related Stories: