அடுத்த நிலைக்கு செல்ல முடியாததால் மனநிலை பாதிப்பு சதுரங்கப்போட்டியில் வென்ற பரிசுகளை சாலையில் காட்சிப்படுத்திய வீரர்

வேலூர்: சதுரங்கப்போட்டியில் வெற்றி பெற்று பல்வேறு பரிசுகளை வென்ற விளையாட்டு வீரர், தான் மேல்நிலைக்கு செல்ல முடியாத மனவேதனையில் இன்று அவற்றை வேலூர் காகிதப்பட்டறையில் காட்சிப்பொருளாக வைத்துள்ளார். ேவலூர்-ஆற்காடு ரோடு காகிதப்பட்டறையை சேர்ந்தவர் வெங்கடேசன் (24), பிஎஸ்சி பட்டதாரி. இவரது தந்தை 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாராம். தாயார் தவமணி.  வெங்கடேசன் சிறுவயதில் இருந்தே சதுரங்க விளையாட்டு போட்டியில் பெரும் ஆர்வமாக இருந்துள்ளார். பள்ளி, ஒன்றியம், மாவட்ட, மாநில, தேசிய அளவில் சதுரங்க போட்டியில் பங்கேற்று  வெற்றி பெற்று பதக்கங்களை வென்றுள்ளார். உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துடன் விளையாடி சான்றிதழ் பெற்றுள்ளார். ஆனால் இவரால் அடுத்த நிலைக்கு செல்ல முடியவில்லையாம்.

இதனால் அவர் கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு நிலையில் இருந்துள்ளார்.  இந்நிலையில் விளையாட்டு போட்டியில் தான் பெற்ற பதக்கங்கள், சான்றிதழ்களை சாலையோரத்தில் இன்று மேசை மீது பொதுமக்கள் பார்வைக்கு வைத்தார்.  பின்னர் அவர், அவ்வழியாக செல்வோரை அழைத்து, சதுரங்க போட்டியில் நான் வெற்றி பெற்று வாங்கிய பதக்கங்கள் இவை. அதிக ஆர்வமும் திறமையும் உள்ள எனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக்கூறினார். மேலும் பதக்கங்களுடன் தேசியக்கொடியையும் கட்டி வைத்திருந்தார். இதைக்கண்டு அங்கிருந்த சிலர், பதக்கங்களை சாலையில் வைக்கவேண்டாம் எனக்கூறி அறிவுறுத்தினர்.இதையடுத்து பதக்கங்களை வீட்டுக்கு எடுத்து சென்றார்.

இதுகுறித்து அவரது தாய் கூறுகையில், நான் மாவு மில்லில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனது மகன் சதுரங்க  போட்டியில் ஆர்வமாக உள்ளான். தற்போது தன்னை மறந்த நிலையில் அவதிப்பட்டு வருகிறான். என்னால் அவனுக்கு போதிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. அவனை யாராவது தொண்டு நிறுவனத்தினர் மீட்டு போதிய சிகிச்சை அளித்தால் உதவியாக இருக்கும். நான் அவனை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றுவிடுவேன் என உறுதியுடன் தெரிவித்தார்.

Related Stories: