பணம் கொடுக்கல் வாங்கல், நிலப்பிரச்சனை சேலம் கலெக்டர் ஆபிசில் அடுத்தடுத்து 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

சேலம் : சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வெவ்வேறு பிரச்சனையில் 8 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சேலம் கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இங்கு கொண்டலாம்பட்டி பெரிய புதூரை சேர்ந்த சாந்தி (35) என்பவர் மனு அளிக்க வந்தார். நுழைவுவாயில் முன்பு வந்த அவர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘எனது கணவர் பரமசிவம் (40). வெள்ளி தொழில் செய்கிறார். ஒரு மகன், 2 மகள் உள்ளனர். சுக்கம்பட்டியை சேர்ந்த எனது அண்ணன் சீனிவாசன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ₹5 லட்சத்து 50 ஆயிரம் கடன் கேட்டார். எனது வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி கொடுத்தேன். மேலும், எனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 6 பவுன் நகையையும் கொடுத்தேன்.

ஓராண்டுக்கு முன்பு கடன் மற்றும் நகையை திரும்ப கேட்டபோது கொடுக்கவில்லை. இது குறித்து, வீராணம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது அண்ணனிடம் இருந்து நகை, பணத்தை மீட்டு தர வேண்டும் என்பதற்காக தீக்குளிக்க முயன்றேன்,’’ என்றார்.இதேபோல், ஓமலூர் தின்னப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் (47), அவரது மனைவி முத்துமாரி, மகன் சிலம்பரசன் ஆகியோரும் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். விசாரணையில், ‘‘கிருஷ்ணன் தனக்கு சொந்தமான முக்கால் ஏக்கர் நிலத்தை சக்திவேல் என்பவருக்கு குத்தகைக்கு விட்டுள்ளார்.

அந்த நிலத்தை விற்று தருமாறு கிருஷ்ணன் புரோக்கர் சேகரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சேகர், சக்திவேலிடம் என்னிடம் ₹1.50 லட்சம் பணத்தை கொடுத்து விட்டு நிலத்தை நீயே வைத்துக்கொள் என்று கூறியுள்ளார். இதனால் சக்திவேல் மற்றும் சேகர்மீது நடவடிக்கை கோரி கிருஷ்ணன் குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.சேலம் சிவதாபுரம் பெருமாம்பட்டி நத்தக்காட்டை சேர்ந்த சுந்தர்ராஜ் (45), அவரது மனைவி ரேவதி ஆகியோர் 7, 3 வயது மகன், மகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில், சுந்தர்ராஜிக்கு சொந்தமாக 25 சென்ட் நிலம் உள்ளது.

அந்த நிலத்தின் அருகே வசிப்பவர், அவரது நிலத்தில் உள்ள கிணற்றில் மோட்டார் அமைப்பதற்காக  சுந்தரராஜ் நிலத்தில் மின்கம்பம் வைத்துள்ளார். இது குறித்து மின்வாரியத்திடம் முறையிட்டு நடவடிக்கை இல்லை என்று கூறி,  கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இந்தவகையில் அடுத்தடுத்து 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: