கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள், நடனங்கள் இடம்பெறக்கூடாது!: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள், ஆபாச நடனங்கள் இடம்பெறக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கோவில் திருவிழா என்றாலே அங்கு பாட்டு கச்சேரி, ஆடல் பாடல் நிகழ்ச்சி காணப்படும். அதுவும் ஒரு சில ஊர்களில் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக பல்வேறு விதமான நாட்டுப்புற கலைகள், கச்சேரிகள் நடத்தப்பட்டு திருவிழா கொண்டாடப்படும். இந்நிலையில், கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி 100க்கும் மேற்பட்ட மனுக்கள் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த ஐகோர்ட் கிளை நீதிபதி தமிழ்செல்வி பல நிபந்தனைகளை விதித்து ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தார். அதில், கோயில் விழா நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகளோ, ஆபாச நடனங்களோ இருக்கக்கூடாது. நிபந்தனைகள் மீறி ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகளோ, ஆபாச நடனங்களோ இருந்தால் நிகழ்ச்சியை நிறுத்தி போலீசார் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

Related Stories: