அடுத்து வரும் சீராய்வு கூட்டங்களில் வட்டி விகிதத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு: கவர்னர் சக்தி காந்ததாஸ் தகவல்

மும்பை: அடுத்து வரும் நிதிக்கொள்கை சீராய்வுக் கூட்டங்களில், வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக, அதன் கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை சீராய்வு கூட்டத்தை நடத்துகிறது. அதில், கடன் வட்டி விகிதம் உட்பட முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நீண்ட காலமாக வட்டி விகிதத்தை மாற்றாத நிலையில், கடந்த 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடந்த அசாதாரண கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை 0.4 சதவீதம் உயர்த்தியது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அடுத்து நடைபெற இருக்கும் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டங்களில், ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படும். எவ்வளவு உயர்த்தப்படும் என இப்போது துல்லியமாக கூற முடியாது. எனினும், 5.15 சதவீதமாக உயர்த்தப்படலாம். நாட்டின் பண வீக்கம் குறித்த கணிப்பு, அடுத்த மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் வெளியிடப்படும். ஜூன் மாத கூட்டத்தில் வட்டி திடீரென அதிகமாக உயர்த்தப்படுவதை தவிர்க்கவே, அசாதாரண கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு சக்தி காந்ததாஸ் கூறினார்.

Related Stories: