புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா: கிராமமே கூடி மீன்பிடித்து உற்சாகம்..!!

புதுக்கோட்டை: விராலிமலை அருகே 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்று மீன்களை அள்ளி சென்றனர். விராலிமலை அருகே உள்ள மேம்பூதகுடி கிராமத்தில் இன்று காலை மீன்பிடி திருவிழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு ஊர்களில் இருந்து குடும்பம் குடும்பமாக வந்த மக்கள், காலையிலேயே பெரியகுளம் கரையில் திரண்டனர். ஊர் முக்கியஸ்தர் வெள்ளை வீசியதை தொடர்ந்து கரையில் காத்திருந்த மக்கள், தாங்கள் கொண்டுவந்த வலை, கச்சா, கூடை, பரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் உடன் குளத்திற்குள் இறங்கி போட்டிபோட்டு கொண்டு மீன்களை பிடித்தனர்.

குளத்தில் நீர் வற்றி இருந்ததால் வலையில் விரால், கெளுத்தி, கட்லா, கெண்டை உள்ளிட்ட மீன்கள் சிக்கின. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முன்னதாக மீன்பிடி திருவிழாவிற்காக கடந்த 15 நாட்களாக பெரியகுளத்தை சுற்றி போக்கஸ் லைட் அமைத்து மேம்பூதகுடி கிராமத்தை சேர்ந்த மக்கள் இரவு பகலாக காவல் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: