சட்ட விரோதமாக நுழைந்த வழக்கு மெகுல் சோக்சி மீதான குற்றச்சாட்டை ரத்து செய்தது டொமினிகா நீதிமன்றம்: இந்தியா அழைத்து வருவதில் சிக்கல்

புதுடெல்லி: வங்கி மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட வைர வியாபாரி மெகுல் சோக்சி, சட்ட விரோதமாக டொமினிகாவுக்குள் நுழைந்ததாக தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது மாமா மெகுல் சோக்சி மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளன. இதற்கிடையே, கடந்த ஆண்டு மே மாதம் கரீபியன் தீவு நாடான டொமினிகாவுக்கு சட்ட விரோதமாக சென்றதாக மெகுல் சோக்சி கைது செய்யப்பட்டார். 51 நாள் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இதற்கிடையே, மெகுல் சோக்சியை டொமினிகாவிலிருந்து இந்தியா அழைத்து வர தனியார் விமானம் மூலம் இந்திய அதிகாரிகள் தயார்நிலையில் இருந்தனர். ஆனால், சோக்சியை இந்திய உளவாளிகள் தான் ஆன்டிகுவாவிலிருந்து டொமினிகாவிற்கு கடத்தியதாக அவரது வக்கீல் நீதிமன்றத்தில் வாதாடினார். இந்நிலையில், டொமினிகாவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக சோக்சி மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கையையும் ரத்து செய்வதாக கடந்த 20ம் தேதி டொமினிகா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதாக சோக்சியின் செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார். இதனால் சோக்சியை இந்தியா அழைத்து வருவதில் மீண்டும் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: