வாணியம்பாடி 24வது வார்டில் மகளிருக்கான படிப்பகம் கட்டி தர வேண்டும்: கவுன்சிலர் கோரிக்கை

திருப்பத்தூர்:  வாணியம்பாடி 24வது வார்டில் மகளிருக்கான படிப்பகம் கட்டி தர வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாணியம்பாடி நகர மன்ற அரங்கத்தில் நேற்று சாதாரண கூட்டம் நடந்தது. நகர மன்ற தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன் தலைமை தாங்கினார். ஆணையர் ஸ்டான்லிபாபு முன்னிலை வகித்தார். பொறியாளர் சங்கர் வரவேற்றார். கூட்டத்தில், சொத்து வரி சீராய்வு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, நகர மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:- 3வது வார்டில் நகராட்சி சார்பில் நடக்கும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 17வது வார்டில் குடிநீர் பைப்புகள் உடைந்து நீர் சாலைகளில் வீணாக செல்கிறது. வீணாகும் குடிநீர் குழாய்களை உடனே பழுது பார்க்க வேண்டும்.

23வது வார்டில் கால்வாய் அடைப்பால் மழை காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீணாக செல்கிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே கால்வாயை தூர்வாரி கழிவுநீர் செல்ல வழி செய்ய வேண்டும்.  12வது வார்டில் நகராட்சி அலுவலகத்தில் சான்றுகள் பெற இடைத்தரகர்கள் செயல்படுகின்றனர். ஆகையால், எந்த பணியாக இருந்தாலும் வார்டு உறுப்பினர்கள் மூலமாக செயல்படுத்த வேண்டும்.

24வது வார்டில் நகராட்சிக்கு சொந்தமான காலியாக உள்ள இடத்தில் மகளிருக்கான படிப்பகம் கட்டி தர வேண்டும். ஷாகிராபாத் மற்றும் பஷீராபாத் பகுதிகளில் மேநீர் தேக்கத்தொட்டி கட்டி தர வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.  இதற்கு மன்ற தலைவர் உமாபாய் சிவாஜிகணேசன் அனைத்து கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: