சொக்கனூர் வறட்டாற்றின் குறுக்கே ரூ. 2.24 கோடியில் தடுப்பணை கட்டும் பணி தீவிரம்: விவசாயிகள் மகிழ்ச்சி

கிணத்துக்கடவு: கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே உருவாகும் வறட்டாறு ஒத்தக்கால்மண்டபம், நாச்சிப்பாளையம், வழுக்குப்பாறை, கணவநாயக்கனூர், சொக்கனூர் முத்துக்கவுண்டனூர், பாலார்பதி வழியாக சென்று கேரள மாநிலம் பழனியால் ஆற்றில் கலக்கிறது. கிணத்துக்கடவின் பகுதியான சொக்கனூர் ஊராட்சி பகுதியில் பிஏபி பாசன வசதி இல்லாததால் மழை காலங்களில் இந்த ஆற்றில் வரும் நீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் கிடைக்கும் அதை வைத்து இந்த பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள்.

கிணத்துக்கடவு மேற்கு பகுதி விவசாயிகளின் முக்கிய ஆதாரமாக உள்ள இந்த வறட்டாற்றின் குறுக்கே முத்துக்கவுண்டனூர் மற்றும் பெரும்பதிக்கும் இடையே பெரிய அளவில் தடுப்பணை கட்டி தண்ணீரை தேக்க வேண்டும் என்று இந்த பகுதி விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தற்போது வறட்டாற்றின் குறுக்கே பெரும்பதிக்கு அருகே நபார்டு திட்டத்தின் மூலம் சுமார் ரூ. 2.24 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது.

அதனைத்தொடர்ந்து அங்கு 50 அடி அகலத்தில் 5 அடி உயரத்தில் தடுப்பணை கட்டும் பணி துவங்கி வேகமாய் நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பணையை கட்டி முடித்தால் இந்த பகுதியில் உள்ள சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களின் நீர் மட்டம் உயரும் என்றும்,  விவசாயம் சிறப்பாக நடக்கும் என்றும் விவசாயிகள் கூறினார்கள்.

Related Stories: