வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பினால் போதை மாத்திரை, ஊசி சப்ளை :2 பேர் கைது; 1300 போதை மாத்திரை

* 15 ஊசி, செல்போன் பறிமுதல்

* வண்ணாரப்பேட்டையில் போலீசார் அதிரடி

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் வாட்ஸ்அப் தகவல் அனுப்பினால் போதை மாத்திரை, ஊசி நேரில் சப்ளை செய்யும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1300 போதை மாத்திரைகள், 15 ஊசி, 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போதை மாத்திரைகளை அதற்கான தண்ணீரில் கரைத்து வைத்து கொண்டு ஊசி மூலமாக உடலில் செலுத்தி போதையில் இருந்து வந்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

வடசென்னை பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். சில மர்ம கும்பல், ஆந்திர மாநிலத்தில் இருந்து போதை மருந்து ஊசிகள், மாத்திரைகளை கடத்தி வந்து சென்னையில் மாணவர்களுக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்து வருகிறது. அவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். தற்போது மும்பையில் இருந்து கடத்தி வந்து போதை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில், தண்டையார்பேட்டை இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் நெடுஞ்சாலை தியாகராய மெட்ரோ ரயில் நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமாக 2 பேர் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசினர். அவர்கள் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தனர். அதற்குள், போதை மாத்திரைகள், ஊசிகள், ஸ்டெர்ய்ல் தண்ணீர் பாட்டில்கள் வைத்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்து 2 பேரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அவர்கள், தரமணி பாரதியார் நகர் பரணி தெருவை சேர்ந்த சூரியா (23), கீழ்கட்டளை ஈஸ்வரன் நகரை சேர்ந்த ராஜ்குமார் 28) என்பதும், இவர்கள் போதை மாத்திரை, ஊசி ஆகியவற்றை வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. மேலும் இவர்கள் மும்பையில் இருந்து போதை மருந்து, மாத்திரை, ஊசிகளை ரயில் மூலம் கடத்தி வந்து வடசென்னை பகுதிகளில் விற்பனை செய்து வந்தனர். இவர்களுக்கு போன் மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ மாத்திரை, ஊசி வேண்டும் என்று தகவல் அனுப்பினால் நேரில் வந்து கொடுப்பார்களாம். இந்த மாத்திரையை, ஸ்டெர்ய்ல் தண்ணீரில் கரைத்து ஊசியில் ஏற்றி உடலில் செலுத்தி கொள்வார்கள்’ என்பது தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து 1300 போதை மாத்திரை, 15 ஊசி, ஸ்டெர்ய்ல் தண்ணீர் பாட்டில்கள், பணம், 2 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரையும் நேற்று மாலை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலடைத்தனர். இச்சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: