சென்னை அமைந்தகரையில் பைனான்சியர் வெட்டிக்கொலை: கொலை வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: சென்னை அமைந்தகரையில் பைனான்சியர் ஆறுமுகம் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. நேற்று முன்தினம் நண்பகல் சென்னை செனாய் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இக்கொலை சம்பவம் அரங்கேறியது. இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், அவ்வழியே சென்ற ஆறுமுகம் என்ற பைனான்சியரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். அவர் உயிருக்கு போராடிய காட்சிகளை பொதுமக்களே வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடனடியாக அவரை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கொலை செய்யப்பட்ட ஆறுமுகம் மீது டிபி சத்திரத்தில் பெண் வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்கும், அதேநேரத்தில் கீழ்ப்பாக்கத்தில் ஆயுதத் தடுப்புச்சட்டத்தில் ஒரு கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரை கொலை செய்த  6 பேர் யார் என்பது குறித்து தனிப்படை போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை தொடர்ந்து ஆய்வு செய்தனர். தற்போது அந்த சிசிடிவி காட்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், அந்த 6 பேரும் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பிச் செல்லும் காட்சியானது பதிவாகியுள்ளது.

இதன் அடிப்படையில் குற்றவாளிகளை தேடிக்கொண்டிருக்கும் நிலையில், நேற்று கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 2 பேர் சரண் அடைந்தனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், இரண்டு ரவுடி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் முன்விரோதம் காரணமாகவே இச்சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.                    

Related Stories: