தூங்குவதற்கு இடம் பிடிப்பதில் தகராறு கூலி தொழிலாளி அடித்து கொலை: மற்றொரு தொழிலாளி கைது

அம்பத்தூர்:  வில்லிவாக்கம், அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ஐயப்பன் (எ) ராஜ்குமார் (33). பாடி பகுதியில் உள்ள ஒரு இரும்பு குடோனில் கூலி வேலை செய்து வந்தார். இவர், தினசரி இரவு பாடி மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் படுத்து தூங்குவது வழக்கம். கடந்த செவ்வாய் கிழமை இரவு, வேலை முடிந்ததும் மது அருந்திய ஐயப்பன், பாடி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தூங்க சென்றுள்ளார். அப்போது, அவர் படுக்கும் இடத்தில் மற்றொரு கூலி தொழிலாளியான அதே பகுதியை சேர்ந்த ஆல்பட் அபுபெல் (45) படுத்து தூங்கியுள்ளார்.

இதை பார்த்த ஐயப்பன், ‘‘இது என் இடம். நான் தூங்கும் இடத்தில் நீ எப்படி படுக்கலாம். எழுந்திரு,’’ என சண்டை போட்டுள்ளார். ஆனால், ஆல்பட் அபுபெல் அங்கிருந்து போக மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. த்தகராறு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த ஆல்பட் அபுபெல், அங்கிருந்த மரப்பலகையை எடுத்து, ஐயப்பன் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த ஐயப்பன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

மறுநாள் காலை, அவ்வழியே சென்ற பொதுமக்கள், படுகாயங்களுடன் ஐயப்பன் கிடப்பதை பார்த்து கொரட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, ஐயப்பன் இறந்தது தெரிந்தது. பின்னர், சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தலைமறைவான ஆல்பட் அபுபெல்லை தேடினர். அதில், அருகில் உள்ள படைவீட்டு அம்மன் கோயில் பகுதியில் அவர் பதுங்கி இருப்பது தெரிந்தது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார், அவரை கைது செய்தனர்.

Related Stories: