மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2.28 அடியாக அதிகரிப்பு: ஒரு வாரத்தில் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தொடர்மழையால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 29,072 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் நேற்றுமுன் தினம் காலை 108.98 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 111.10 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2.28 அடி உயர்ந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 79.98 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு இதேநிலை நீடித்தால், ஒருவார காலத்தில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறிவித்தபடி ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories: