மே 7 முதல் இ-பாஸ் உத்தரவு எதிரொலி குவியும் சுற்றுலாப்பயணிகள் குலுங்குது கொடைக்கானல்

கொடைக்கானல் : கொடைக்கானலுக்கு செல்ல மே 7ம் தேதிமுதல் இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை தற்போது அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை சீசன் களைகட்டியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 7ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பதிவு செய்த பிறகே கொடைக்கானலுக்கு வர முடியும்.

இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை வழக்கத்தைவிட தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை என்பதாலும், அக்னி நட்சத்திரம் இன்று துவங்க உள்ளதாலும் சுற்றுலாப் பயணிகள் வருகை பல மடங்கு தற்போது அதிகரித்துள்ளது.இதனால் கொடைக்கானல் ஏரி, பிரையண்ட் பூங்கா, தூண் பாறை, குணா குகை, மோயர் பாயின்ட் உள்ளிட்ட இடங்களில் மக்கள்கூட்டம் அலைமோதுகிறது. கொடைக்கானலில் பகலில் வெப்பமான சூழலும், இரவில் இதமான சூழலும் நிலவி வருகிறது. மேலும் இங்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் பகல் நேரத்தில் சுமார் 80 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளது.

கோடை விழாவுக்கு கூட்டம் குறையுமா?

பொதுவாக கொடைக்கானலில் கோடை சீசனில் கோடை விழா நடத்தப்படும் போதுதான் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருகை தருவார்கள். தற்போது மே 7க்கு பிறகு கொடைக்கானலுக்கு வர இ-பாஸ் கட்டாயம் என்பதால் இந்த ஆண்டு கோடை விழாவில் சுற்றுலாப் பயணிகள் குறைந்தளவே வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post மே 7 முதல் இ-பாஸ் உத்தரவு எதிரொலி குவியும் சுற்றுலாப்பயணிகள் குலுங்குது கொடைக்கானல் appeared first on Dinakaran.

Related Stories: