திருச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளரின் 3 வங்கி லாக்கரில் 156 பவுன், 2 கிலோ வெள்ளி சிக்கியது: 2 வது நாள் சோதனையில் விஜிலன்ஸ் அதிரடி

திருச்சி: திருச்சி கலெக்டர் அலுவலக சாலை ராஜா காலனியில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் புதிதாக தொழில் தொடங்கும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில் கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்ய பயனாளிகளிடம் தொழில் மைய மேலாளர் லஞ்சம் வசூலித்து வந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதன் பேரில் நேற்றுமுன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சென்று மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவீந்திரன் (45), உதவி பொறியாளர் கம்பன் (40) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களது அறைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில் பொதுமேலாளர் ரவீந்திரன் அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து உறையூர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பொது மேலாளர் ரவீந்திரன் வீட்டில் சோதனை நடத்தினர். வீட்டில் ரூ.6 லட்சம் ரொக்கம், 50 பவுன் நகை, ரூ.50 லட்சம் மதிப்புள்ள நில ஆவணங்கள் மற்றும் ரூ.50லட்சம் மதிப்புள்ள வங்கி முதலீடு பரிவர்த்தனை ஆவணங்கள், 8 வங்கி பாஸ் புத்தகம் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் 2வது நாளான நேற்று ரவீந்திரனுக்கு கணக்கு உள்ள 3 வங்கிகளில் லாக்கரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 156 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் இருந்தது தெரியவந்தது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள 2 வீட்டு ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கில் இருந்த ரூ.50 லட்சம், நகைகள் 206 பவுன் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றுக்கு முறையான விளக்கம் இல்லை என்றால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: