ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தை பாதுகாக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தை பாதுகாக்க வேண்டும் எனவும், மசூதியில் தொழுகை நடத்துவதை தடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்கக் கோரி 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் வீடியோ ஆய்வு நடத்தி அறிக்கை தர உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட 3 நாள் வீடியோ கள ஆய்வு நேற்று முன்தினத்துடன் முடிந்தது. அப்போது, மசூதியில் உள்ள கிணற்றில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், அந்த இடத்தை சீலிட்டு பாதுகாக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, ஞானவாபி மசூதியில் வீடியோ ஆய்வு நடத்த தடை விதிக்கக் கோரி  உச்ச நீதிமன்றத்தில் மசூதி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், நரசிம்மா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மசூதியில் சீலிடப்பட்ட உத்தரவு, சட்ட விரோதமானது என மசூதி தரப்பில் வாதாடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தை பாதுகாக்க வாரணாசி ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். மேலும், மசூதியில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே தொழுகை நடத்த வேண்டுமென்ற கட்டுப்பாட்டை நீதிபதிகள் நீக்கி, விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

* நாளைக்குள் அறிக்கை தாக்கல்

ஞானவாபி மசூதியில் நடத்தப்பட்ட வீடியோ ஆய்வு அறிக்கையை வாரணாசி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவில் இருந்து வழக்கறிஞர் ஆணையர் அஜய் மிஸ்ராவை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆய்வு அறிக்கையை ஊடகங்களுக்கு கசிய விட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நீதிபதிகள் கூறினர். மேலும், மற்ற 2 பேர் கொண்ட குழு நாளைக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் அவகாசம் வழங்கினர்.

Related Stories: