குமரி முழுவதும் சாரல் மழை; பேச்சிப்பாறை அணைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: புத்தன் அணையில் 24 மி.மீ பதிவு

நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் மாவட்டம் முழுவதும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது.

ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பதிவாகியது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் தணிந்திருந்தது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42.45 அடியாகும். அணைக்கு 806 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. மலையோர பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகின்ற மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

உச்சநீர்மட்டம் 48 அடி கொண்ட பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் 42 அடியை கடந்துள்ளதால் அணைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அணையில் நீர்மட்டம் 45 அடியை எட்டும் தருவாயில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.

இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை தொடங்கும் முன்னரே அணை நீர்மட்டம் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 42.75 அடியாகும். அணைக்கு 323 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-1ல் நீர்மட்டம் 10.23 அடியாக இருந்தது. அணைக்கு 79 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-2ல் 10.33 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு 120 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பொய்கையில் 17.90 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 16.65 அடியாகும். முக்கடல் அணையின் நீர்மட்டம் 4.20 அடியாகும்.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்

கேரள கடல் பகுதியில் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்ப் ஆப் மன்னார், கன்னியாகுமரி கடல் பகுதிகள் ஆகிய இடங்களில் இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். 19ம் தேதி வரை அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: