அதிமுக ஆட்சி காலத்தில் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.7 கோடி முறைகேடு: வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 25 பேருக்கு நோட்டீஸ்

புதுக்கோட்டை: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த ரூ.7 கோடி முறைகேடு தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 25 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2016 முதல் 2020 வரை 545 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 435 வீடுகள் கட்டாமலேயே வீடு கட்டியதாக போலியாக கணக்கு எழுதி ரூ.7 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, விசாரணை நடத்தி அவர்கள் மீது துறை ரீதியான 17 பி நடவடிக்கை எடுக்க ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குநருக்கு நேற்று உத்தரவிட்டார். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 25 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: