சித்தூர் அருகே பலமனேரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீதிருப்பதி கெங்கையம்மன் திருவிழா கோலாகலம்-ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சித்தூர் : சித்தூர் அருகே பலமனேரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீதிருப்பதி கெங்கையம்மன் திருவிழா கோலாகலமாக நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சித்தூர் மாவட்டம், பலமனேர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதிருப்பதி கெங்கையம்மன் திருவிழா பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று நோய் எதிரொலியால் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் மாநில அரசு கட்டுப்பாடுகளை நீக்கியது.

இதையடுத்து இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு வெகு விமரிசையாக ஸ்ரீதிருப்பதி கெங்கையம்மன் திருவிழா பலமனேர் நகரத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதை காண சுற்றுப்புற கிராமங்கள், நகரங்கள், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீதிருப்பதி கெங்கை அம்மனை தரிசனம் செய்தனர்.

எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்களுக்கு அம்மனை தரிசனம் செய்ய அனைத்து வசதிகளையும் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டது. அதேபோல் பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை 6 மணியளவில் அம்மனின் சிரசு ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். ஊர்வலத்தில் வாணவேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க நகரின் முக்கிய வீதிகளில் அம்மன் சிரசு ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

பின்னர் பலமனேர் நகரில் உள்ள ஏரியில் கரைக்கப்பட்டது.

Related Stories: